Friday, August 28, 2020

உலகின் இலட்சக்கணக்கான சவால்களுக்கு கோடிக்கணக்கான தீர்வுகள் வழங்கும் திறன் இந்தியாவிடம் உள்ளது என பிரதமர் திரு.நரேந்திர மோடி பெருமிதம்: “உள்ளூர்ப் பொருள்களுக்குக் குரல் கொடுப்போம்’’ என்னும் தாரக மந்திரத்தைப் பயன்படுத்தி தன்னிறைவு இந்தியா என்னும் தொலைநோக்கை அடைய 130 கோடி மக்களுக்கும் தமது சுதந்திர தின உரையில் வலியுறுத்தல்.

 சுதந்திர தினத்தன்று பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், வெபினார் ஒன்று இன்று நடைபெற்றது. மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மண்டல மக்கள் தொடர்புப் பிரிவு  மற்றும் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.

பிரதமர் அறிவித்த பல்வேறு திட்டங்கள் மற்றும் கொள்கைகள் குறித்து பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் விளக்கினர். தமிழ்நாடு, புதுச்சேரி ஆர்பிஐ-யின் முன்னாள் மண்டல இயக்குநர் டாக்டர் ஜே. சதக்கத்துல்லா, நிதித்துறைக்கான முன்முயற்சிகள் மற்றும் திட்டங்கள் குறித்து பங்கேற்றவர்களிடம் விளக்கினார். “ஜன் தன் வங்கிகள் உதவியுடன், 40 கோடிக்கும் அதிகமானோர் கணக்குகளைத் தொடங்கினர். இந்தியா முழுவதும் மொபைல் கட்டமைப்பை இணைக்க ஆதார் பெரிதும் உதவியது” என்று கூறினார்.

நிதித்துறை உண்மையிலேயே உலகமயமாக்கப்பட்டு, தொழில்நுட்பத்தைச் சிறப்பாகப் பயன்படுத்தி வருகிறது. நிதித் துறையில், அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளால், அது வலுவடைந்துள்ளதுடன், மக்களிடையே நம்பிக்கை உணர்வை ஏற்படுத்தியுள்ளது என்றார் அவர்.

“சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களில், சுமார் 11 கோடி பேர் பணியாற்றுவதால்,  நாட்டின் பொருளாதாரத்துக்கு அவை மிகவும் முக்கியமானவை. பிரதம மந்திரி முத்ரா திட்டத்தின் மூலம், 25 கோடி தொழில் முனைவோர் பயனடைந்துள்ளனர்’’ என்று அவர் கூறினார்.

தேசிய டிஜிட்டல் சுகாதார இயக்கத்தின் பயன்கள் குறித்து விவரித்த மூத்த பத்திரிகையாளர் திரு.ஆர்.வெங்கடேஷ், “ இத்திட்டத்தின் கீழ், அனைத்துக் குடிமக்களுக்கும் சுகாதார அடையாள அட்டை வழங்கப்படும்.  செய்து கொள்ளப்பட்டப் பரிசோதனை, நோய் பாதிப்பு, நோய் கண்டறிதல், சிகிச்சை, கொடுக்கப்பட்ட மருந்துகள் உள்ளிட்ட முழுமையான சுகாதார வரலாறு அதில் கொடுக்கப்பட்டிருக்கும். இந்தச் சுகாதார அட்டையின் உதவியுடன், நோயாளியின் உடல்நலத் தகவல்களை மருத்துவரால் எளிதில் அறிந்து கொள்ள முடியும். இது பரிசோதனைகள் மற்றும் நோய் கண்டறிதலை மீண்டும் மேற்கொள்வதைத் தவிர்க்க உதவும். சுகாதார அடையாள அட்டை டிஜிட்டல் வடிவில் மத்திய சர்வரில் சேமிக்கப்படுவதால், இதை எந்தப் பகுதியிலிருந்தும் அணுக முடியும்’’ என்று கூறினார். இந்தத்திட்டம் மருத்துவர்கள், மருத்துவமனைகள், மருந்துக்கடைகள் உள்ளிட்ட மருத்துவத் துறையினர் அனைவரையும் இணைக்கக் கூடியதாகும் என அவர் தெரிவித்தார்.

இந்த முன்முயற்சி மூலம், அடுத்த பத்தாண்டுகளில், அநேகமாக அனைத்து குடிமக்களின் சுகாதாரப் பதிவு டிஜிட்டல்மயமாக்கப்படும். இதன் மூலம் மருத்துவர்கள் நோயாளிகளின் ஆரோக்கியத்தை உன்னிப்பாகக் கவனிக்க இயலும் என்று அவர் கூறினார்.  சுகாதார ஆவணங்களை முடக்குவதைத் தவிர்க்கும் வகையில், இந்த தகவல்கள் அனைத்தும் பாதுகாப்பாக வைக்கப்படும் என மத்திய அரசு உறுதியளித்துள்ளது என திரு .வெங்கடேஷ் கூறினார். ஆரம்ப சுகாதார மையங்களின் உள்கட்டமைப்பு மேம்பாட்டை நோக்கிய ஒரு முன்னேற்றம் இத்திட்டம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஒரு நாடு ஒரே ரேசன் அட்டைத் திட்டம் குறித்து விளக்கிய திரு.ஆர்.வெங்கடேஷ், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைவார்கள் என்றார். ஒவ்வொரு மாநிலத்திலும் ரேசன் முறை மாறுபட்டிருப்பதால், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்தப் புதிய திட்டத்தின் மூலம், மக்களின் ஆவணங்கள் டிஜிட்டல்மயமாக்கப்பட்டு, தங்கள் சொந்த மாநிலங்களில் பெறத் தகுதி பெற்ற  மானிய விலைப் பொருள்களை பிற இடங்களில் பெறுவதற்கு வழி ஏற்படும் என்று அவர் கூறினார்.

பிரதம மந்திரி பாரதிய ஜன ஔஷதி பரியோஜனா குறித்துப் பேசிய , பிரதமர் பாரதிய ஜன் ஔஷதி கோவை மையத்தின் உரிமையாளர் திருமதி.பி.பாக்யலட்சுமி, ஒரே விதமான மருந்துக்கலப்புள்ள பொதுவான மருந்துகள் (Generic Drug) பற்றிய விழிப்புணர்வு பரவலாக உள்ளது என்றும், 2017-இல் நாளொன்றுக்கு 10 அல்லது 15 ஆக இருந்த எண்ணிக்கை 2020-இல் 100 ஆக உயர்ந்துள்ளது என்றும் கூறினார். “பொதுவான மருந்துகளின் உபயோகத்தில், தற்போதைய தொற்றுப் பரவல் காலத்தில் ஏழை மக்கள் முக்கிய பயனாளர்களாக உள்ளனர். நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய் போன்ற முக்கிய நோய்களுக்கான மருந்துகள் இக்கடைகளில் குறைந்த விலையில் கிடைக்கின்றன’’ என்று அவர் கூறினார். மருந்துகள் தவிர, இன்சுலினும் குறைந்த விலையில் விற்கப்படுவதாகவும், சானிடரி நாப்கின்கள் ஒரு பட்டை ஒரு ரூபாய் விலையில் விற்கப்படுகின்றன என்றும்  அவர் தெரிவித்தார்.

கோவை கண்ணம்பாளையத்தைச் சேர்ந்த திரு. சுப்பிரமணியம் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். கடந்த 20 ஆண்டுகளாக, உயர் ரத்த அழுத்தத்துக்கு தான் மருந்து எடுத்துக் கொள்வதாகவும், 2017 முதல் பொது மருந்தை எடுத்துக் கொள்வதால், மாதத்திற்கு ரூ.1500 வீதம் மருந்துச் செலவை தான்  மிச்சப்படுத்துவதாகவும் அவர் கூறினார். சுமார் 200 பேரிடம் இதுகுறித்த விழிப்புணர்வை தான் ஏற்படுத்தியதாக அவர் தெரிவித்தார்.

சென்னை மண்டல மக்கள் தொடர்புப் பிரிவு இணை இயக்குநர் திரு. ஜே. காமராஜ், சுதந்திர தினத்தன்று பிரதமர் ஆற்றிய உரையின் சாரத்தை சுருக்கமாக விளக்கினார். இந்தியா தன்னிறைவை அடைய வேண்டுமென்ற பிரதமரின் தொலைநோக்கை அவர் எடுத்துரைத்தார். உலகின் இலட்சக்கணக்கான சவால்களுக்கு கோடிக்கணக்கான தீர்வுகள் வழங்கும் திறன் இந்தியாவிடம் உள்ளது என பிரதமர் பெருமிதத்துடன் பேசியதைச் சுட்டிக்காட்டிய அவர்,  “உள்ளூர்ப் பொருள்களுக்குக் குரல் கொடுப்போம்’’ என்னும் தாரக மந்திரத்தைப் பயன்படுத்தி, தன்னிறைவு இந்தியா என்னும் தொலைநோக்கை அடைய 130 கோடி மக்களுக்கும் அவர் அழைப்பு விடுத்ததைச் சுட்டிக்காட்டினார். மறுதிறன் மற்றும் உயர்திறன் மூலம் இதனை எட்டலாம். புதிய கல்விக் கொள்கை, புதுமையான கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சி மூலம் இந்தியாவைத் தன்னிறைவு பெற்ற நாடாக மாற்ற முடியும் என்பதை வலியுறுத்துவதாக  அவர் கூறினார். விவசாயத்தில் தன்னிறைவைப் பெற உதவிய விவசாயிகளை பிரதமர் பாராட்டியதை அவர் பகிர்ந்து கொண்டார். விவசாய உற்பத்தி சந்தைப்படுத்துதல் குழு சட்டத்தில் கொண்டு வரப்பட்ட சீர்திருத்தங்களை விளக்கிய அவர், இது விவசாயிகளின் விற்பனை பேர ஆற்றலை அதிகரித்துள்ளதாக கூறினார். பிரதமர் தமது உரையில், புதிய விவசாயக் கட்டமைப்பு நிதியாக 100000 கோடி ஒதுக்குவது பற்றிக் குறிப்பிட்டதை அவர் சுட்டிக்காட்டினார். நிகிழ்ச்சியில் அவர் நன்றியுரையும்  நிகழ்த்தினார்.

முன்னதாக வரவேற்புரையாற்றிய சென்னை பத்திரிகை தகவல் அலுவலக இயக்குநர் திரு. குருபாபு பலராமன், பிரதமரின் உரையின் தொலைநோக்கு பற்றி விவாதிப்பதன் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தினார். வரும் ஆண்டுகளில் இந்தியா பெரும் உச்சத்தை எட்டுவதற்கு சாத்தியமான  திட்டம் இது என்று அவர் குறிப்பிட்டார்.

Sunday, June 28, 2020

தொலை மருத்துவம் - கோவிட்-19 ஊரடங்கு நேரத்தில் நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதம்


கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு, ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு விதத்தில், பல்வேறு விதமான சிக்கல்கள் மற்றும் பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்து. அமைப்புசாரா தொழிலாளர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், விவசாயிகள், பெண் வணிகர்கள், சிறு வியாபாரிகள் மற்றும் ஏழைகளின் பாதிப்பைப் போக்க, சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ், மத்திய அரசு பல்வேறு திட்டங்களைத் தொடங்கியுள்ளது.  மருத்துவமனைகளுக்குச் சென்றால்,  கோவிட்-19 தொற்று பரவக்கூடும் என்ற அச்சம் காரணமாக, நீரிழிவு, இதயக் கோளாறு மற்றும் புற்றுநோயாளிகள் போன்ற நாள்பட்ட நோய்களால் அவதிப்படுவோர் கூட, தங்களது வழக்கமான பரிசோதனைகளை ரத்து செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மிக அவசரத் தேவையாக இருந்தால் தவிர மருத்துவமனைகளுக்கு வரவேண்டாம் என மருத்துவர்களே அறிவுறுத்தி வருகின்றனர்.  


பிரதமர் திரு.நரேந்திரமோடி, காணொளி மூலம் ஆற்றிய ஒரு உரையில்,  தொலைமருத்துவத்தை பெருமளவில் பிரபலப்படுத்தக் கூடிய புதிய வழிமுறைகள் பற்றி யோசிக்குமாறு கேட்டுக் கொண்டிருந்தார்.  இதையடுத்து, இந்தியாவில், தொலைமருத்துவம் மற்றும் தொலை ஆலோசனை பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை, மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் விளக்கத்தின்படி,  தொலைமருத்துவம் என்பது,  தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, சுகாதாரச் சேவைப் பணியளார்கள், உரிய சுகாதார சேவைகளை வழங்க வேண்டும் என்பதாகும்.   பதிவுபெற்ற மருத்துவர்கள், தொலைபேசி, காணொளி,  வாட்ஸ்ஆப், முகநூல், ஸ்கைப் அல்லது மின்னஞ்சல் போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, நோயாளிகளுடன் ஆலோசிக்க வேண்டும்.   அனுபவ அடிப்படையில் மருத்துவரின் கணிப்பு, அந்த நோயாளிக்கு தொலைமருத்துவம் மூலம் சிகிச்சை அளிப்பது, அவரது உடல்நிலைக்கு ஏற்றதா என்பதை முடிவுசெய்ய வழிகாட்டும்.   மாநில சுகாதாரத்துறையின் ஒப்புதலோடு, இந்திய தொலை மருத்துவ சங்கம் , தமிழ்நாட்டில் தொலைமருத்துவ வசதிகளை இலவசமாக வழங்குகிறது.   தமிழ்நாட்டில் தொலைமருத்துவ சேவைகளைப் பெற விரும்புவோர், www.tsitn.org/telemedicine-facilities-in-tamilnadu  website   என்ற இணையதளம் மூலம் பயன்பெறலாம். 


திருச்சியில் வசிக்கும் அரசு ஊழியரான திரு.கண்ணன்,  தாம் ஒரு இதய நோயாளி என்றும், திருவனந்தபுரம் ஸ்ரீ சித்ர திருநாள்மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன மருத்துவமனையில், புற நோயாளியாக சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறுகிறார்.   அங்குள்ள இருதய சிகிச்சைப் பிரிவிற்கு, மூன்று மாதத்திற்கு ஒருமுறை நேரில் சென்று மருத்துவரிடம் காண்பித்து வந்துள்ளார்.   ஆனால், மார்ச் மாதமே, கோவிட்-19 ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால்,  வெளியூர்ப் பயணம் உகந்தது அல்ல என்பதால்,  மருத்துவரிடம் செல்வதையே அவர் ஒத்திப்போட்டுள்ளார்.  அத்துடன், மாநிலங்களுக்கிடையேயான ரயில் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டுவிட்டதால், மாநிலம் விட்டு மாநிலம் பயணம் செய்வது உகந்ததாக தெரியவில்லை.  மருத்துவரை சந்திக்கும் தேதி இரண்டுமுறை ஒத்திவைக்கப்பட்டு, ஜுலை1ஆம் தேதி திருவனந்தபுரத்திற்கு செல்வதாக இருந்தது.   ஆனால், கோவிட்-19 பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாகல், ஊரடங்கு நீட்டிக்கப்படும் நிலை தான் உள்ளது. இந்த நிலையில், திரு. கண்ணன் போன்ற நோயாளிகளுக்கு தொலைமருத்துவம் உண்மையிலேயே ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.   அவரது ரத்தப்பரிசோதனை, கொழுப்பு அளவு பரிசோதனை, இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் மற்றும் உடல் எடை விவரங்களை வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பிவைக்குமாறு, திருவனந்தபுரம் மருத்துவமனையில் இருந்து அவருக்கு தொலைபேசி மூலம் தெரிவிக்கப்பட்டது.  உடல் பரிசோதனைக்கான கட்டணம் ரூ.30-ஐ, நெட்பேங்கிங் மூலம் செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டது.  அத்துடன், அவரது பரிசோதனைக்கு நிர்ணயிக்கப்பட்ட தேதியிலேயே இதய மருத்துவர் அவரைத் தொடர்புகொண்டு, ரத்தப் பரிசோதனை முடிவுகள் அடிப்படையில் அவருக்கு ஆலோசனைகளை வழங்கினார்.   தேவைப்பட்டால், தொலைபேசி/வாட்ஸ்ஆப் வாயிலாக தொடர்புகொண்டால், மருந்துகள் மாற்றித்தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மிக அவசரத் தேவை ஏற்பட்டால், உள்ளூர் மருத்துவரை அணுகுமாறும் அவருக்கு அறிவுரை வழங்குகிறார்.   மருந்துக் கடைகள் அனைத்தும் திறந்திருப்பதால்,  மருந்து வாங்குவதில் எந்த சிரமமும் இருக்காது என்பதோடு,  ஆன்லைன் முறையில் எந்த சிரமுமின்றி மருந்துகளை வாங்கிக் கொள்ளலாம்.   நாள்பட்ட நோயாளிகள், தொடர்ந்து மருந்து – மாத்திரைகளை உட்கொள்ளவும், நிலைமை மேம்படும் வரை, மருத்துவரை நேரடியாக சந்திப்பதை தாமதிக்கலாம். 


அந்தவகையில், தொலைதூர கிராமங்களில் மூத்த மருத்துவ நிபுனர்களை சந்திப்பது மிகவும் கடிணமான இந்த நேரத்தில்,  மருத்துவ சிகிச்சை முறையில் தொலைமருத்துவம் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியுள்ளது.    எனினும், இளநிலை மருத்துவர்கள் இந்த ஆன்லைன் முறைகளைப் பயன்படுத்தி, தங்களது முதுநிலை மருத்துவர்களைத் தொடர்புகொண்டு, அவசர சிகிச்சைகளை வழங்குவதோடு,  தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட நோயாளிகளை, மாவட்டத் தலைமை மருத்துவமனைகள் அல்லது மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சேர்த்து, சிகிச்சை அளிக்கலாம்.   அனைத்திற்கும் மேலாக,  கோவிட்-19 ஊரடங்கு காலத்தில் பயணம் செய்ய முடியாத நோயாளிகளுக்கு, தொலைமருத்துவம்  ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.  மருத்துவரை நேரில் சந்திக்கும் போது, அவர் வழங்கும் ஆலோசனைகள் மற்றும் கணிவான பேச்சுக்கள், ஒரு நோயாளி விரைவில் குணமடைய அவசியம் என்ற நிலையில்,   இதற்கு முன் இல்லாத வகையில், தொழில்நுட்பம் அதனை சாத்தியமாக்கியுள்ளது. 


அந்தவகையில், தொலைதூர கிராமங்களில் மூத்த மருத்துவ நிபுணர்களை சந்திப்பது மிகவும் கடினமான இந்த நேரத்தில்,  மருத்துவ சிகிச்சை முறையில் தொலைமருத்துவம் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியுள்ளது.    எனினும், இளநிலை மருத்துவர்கள் இந்த ஆன்லைன் முறைகளைப் பயன்படுத்தி, தங்களது முதுநிலை மருத்துவர்களைத் தொடர்புகொண்டு, அவசர சிகிச்சைகளை வழங்குவதோடு,  தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட நோயாளிகளை, மாவட்டத் தலைமை மருத்துவமனைகள் அல்லது மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சேர்த்து, சிகிச்சை அளிக்கலாம்.   அனைத்திற்கும் மேலாக,  கோவிட்-19 ஊரடங்கு காலத்தில் பயணம் செய்ய முடியாத நோயாளிகளுக்கு, தொலைமருத்துவம்  ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.  மருத்துவரை நேரில் சந்திக்கும்போது, அவர் வழங்கும் ஆலோசனைகள் மற்றும் கணிவான பேச்சுக்கள், ஒரு நோயாளி விரைவில் குணமடைய அவசியம் என்ற நிலையில்,   இதற்கு முன் இல்லாத வகையில், தொழில்நுட்பம் அதனை சாத்தியமாக்கியுள்ளது.  

June 2020

Click here to view/Download June 2020 Edition